தென்னிந்திய சினிமாவில் பழி வாங்கும் பேயை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஏன் ‘நான் ஈ’ படத்தில் ஒரு பழி வாங்கியது! எம்.ஜி.ஆர்., ரஜினி நடித்த படங்களில் யானை பழி வாங்கியது. பாம்புகள் கூட பல ஜன்மங்கள் கழித்துப் பழிவாங்கிய படத்தைப் பார்த்திருக்கிறோம். முதல் முறையாகத் தனக்கு மிகக் கொடூரமாகத் தீங்கிழைத்தவர்களைச் சட்டப்படி ஒரு நாய் பழிவாங்குகிறது என்று கதை எழுதி ‘கூரன்’ படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி.
சித்தார்த் விபின் இசையமைத்து, மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் நாய் முதன்மைக் கதாபாத்திரத்திலும் அந்த நாய்க்கு நீதி பெற்றுக்கொடுக்கும் வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்கள். இவருடன் ஒய். ஜி. மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கனா புரொடக்சன்ஸ் சார்பில் வி.பி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ள இப்படத்தை, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படம் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில் ‘கூரன்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.