திருமலை: திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து லட்டு பிரசாத தயாரிப்புக்கான நெய் கொள்முதல் செய்வதில் தேவஸ்தானம் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்காக திருமலையில் புதிதாக ஆய்வகம் திறக்கப்பட்டது. லட்டு பிரசாதம் தயாரிக்க தினசரி 14 டன் நெய் தேவைப்படுகிறது. தற்போது கர்நாடக பால் கூட்டமைப்பு (கே.எம்.எப்) மற்றும் டெல்லியை சேர்ந்த ஆல்பா நிறுவனங்கள் மூலம் தேவஸ்தானம் நெய் கொள்முதல் செய்கிறது.
கே.எம்.எப். சார்பில் ஒவ்வொரு லாரியும் 40 முதல் 50 டன் நெய்யை கொண்டுள்ளது. ஆனால் ஆய்வகத்தில் அதன் தரத்தை உறுதிப்படுத்த சுமார் ஒன்றரை நாளாகி விடுகிறது. கடந்த காலங்களில், 40 முதல் 50 டன் நெய்யை முன்கூட்டியே தேவஸ்தானம் சேமித்து வைத்திருந்தது. ஆனால் தற்போது அதுபோன்ற நிலை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய் விநியோகம் ஒருநாள் தாமதமானது. இதனால் காலை முதல் மதியம் வரை பூந்தி தயாரிப்பு பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. கோடை காலத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் லட்டு பிரசாதம் தயாரிக்க அதிகளவு நெய் தேவைப்படும். எனவே மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் லட்டு தட்டுப்பாடு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நெய் கொள்முதல் துணை தலைமை நிர்வாக அதிகாரி பிரசாத் நேற்றுமுன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் வழங்குவதில் தட்டுப்பாடு வராமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து வருகிறோம். இதுதொடர்பாக தேவஸ்தான உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற நிறுவனங்களிடமிருந்து நெய் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கோடைக்காலம் வருவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், முன்கூட்டியே அதற்கான ஆயத்தப்பணிகள் செய்து வருகிறோம். எனவே லட்டு தட்டுப்பாடு பிரச்னை வராது என நம்புகிறோம், என்றார்.
The post நெய் கொள்முதலில் தாமதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தட்டுப்பாடு? தேவஸ்தானம் விளக்கம் appeared first on Dinakaran.