புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் சம்மந்தப்பட்ட ரூ.661 கோடி சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது. ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் (ஏஜெஎல்) நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்தது. இதற்காக காங்கிரஸ் கட்சியிடம் ரூ.90 கோடி கடன் வாங்கப்பட்டிருந்தது. இந்த கடனை திருப்பி செலுத்ததால் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் வாங்கிக் கொண்டது. யங் இந்தியா நிறுவனம் மூலம் வெறும் ரூ.50 லட்சம் செலவில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை கையப்படுத்தியதாக 2014ல் பாஜவின் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக 2021ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து, ஏஜெஎல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.661 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்நிலையில், இந்த சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத்துறை தற்போது நோட்டீஸ் விடுத்துள்ளது. டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள ரூ.661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களில் செயல்படும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
The post நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்.கின் ரூ.661 கோடி சொத்து கையகப்படுத்த ஈடி நோட்டீஸ் appeared first on Dinakaran.