டெல்லி: காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் சர்வாதிகார பாஜக அரசு செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து கர்நாடக மாநிலம் கல்புரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;
பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் அடிபணியாது என கூறினர். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த மத்திய அரசின் தொடர் தோல்விகளை மக்களிடையே அம்பலப்படுத்த உள்ளதாக கூறிய அவர், பாஜக வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்துடன் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி பொய் வழக்குகளை பதிவு செய்வதாக விமர்சித்தார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக தங்கள் போராட்டம் தீவிரமடையும் என்று கார்கே எச்சரித்தார். இந்நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகம் முன்பாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் பதாகைகள் ஏந்தி மத்திய அரசுக்கும், அமலாக்கத்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பொய் வழக்கினை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, கும்பகோணம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
The post நேஷனல் ஹெரால்டு வழக்கு.. காங். கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படும் பாஜக: கார்கே குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.