நாகர்கோவில்: நாகர்கோவில் – கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம் வழியாக தினசரி பகல் நேர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 க்கு கோட்டயம் சென்றடைகிறது. ஆனால் மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுவது இல்லை. இது இவ்வாறு வித்தியாசமாக இயக்கப்படுவதால் இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பகல் நேரத்தில் பயணம் செய்யும் விதத்தில் பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் நாகர்கோவிலில் இருந்து தமிழக வழித்தடங்களுக்கு, அதாவது திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக பகல் நேரத்தில் குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது காலையில் நாகர்கோவில் – மும்பை (6.15), குருவாயூர் – சென்னை (6.33), நாகர்கோவில் – கோவை (7.50) ஆகிய மூன்று ரயில்களும் சென்ற பிறகு மதியம் 12.20க்கு திருச்சி இன்டர்சிட்டி ரயில் மட்டுமே உள்ளது. இடைப்பட்ட நேரத்தில் திருநெல்வேலி மார்க்கம் எந்த ஒரு ரயில் சேவையும் தற்போது இல்லை. இதற்காக திருவனந்தபுரத்திலிருந்து காலை 6.45 க்கு புறப்பட்டு நாகர்கோவில் 8.55க்கு வந்து சேரும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
விருதுநகரில் இருந்து ஒரு வழித்தடம் பிரிந்து கிழக்கு கடற்கரை நகரங்கள் வழியாக அதாவது அருப்புக்கோட்டை, மானா மதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் சென்றடைகிறது. இந்த தடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து இந்த வழித்தடங்களில் செல்ல எந்த ஒரு தினசரி ரயில் சேவையும் தற்போது இல்லை.
ஆகவே நாகர்கோவில் – கோட்டயம் பகல் நேர ரயிலை திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை அனுப்பி உள்ளனர். காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் வந்து பின்னர் தற்போது இயங்கும் கால அட்டவணையில் கோட்டயம் வரை இயக்கலாம். மறு மார்க்கமாக இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு நாகர்கோவில் வந்து, பின்னர் மாலை 6 மணிக்கு திருவாரூர் சென்று சேருமாறு இயக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்கினால் வேளாங்கண்ணி, காரைக்கால், திருத்துறைப்பூண்டி, திருநள்ளாறு, மன்னார்குடி, கும்பகோணம் , மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு எளிதாக அடுத்த ரயில் அல்லது பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்.
கொரோனா காலத்துக்கு முன் திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறை மற்றும் ஈரோடுக்கு செல்லத்தக்க வகையில் ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் பல்வேறு மாற்றங்கள் செய்து தற்போது செங்கோட்டை – மயிலாடுதுறை என்று இயக்கப்படுகின்றது. இந்த ரயில் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதால் திருநெல்வேலி, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், துலுக்கபட்டி ஆகிய ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்யும் பயணிகள் மயிலாடுதுறை செல்லும் நேரடி ரயிலை இழந்துள்ளனர்.
இதுவரை இதற்கு மாற்று ஏற்பாடு ரயில்வே துறையால் செய்யப்படவில்லை. திருநெல்வேலியிருந்து காலை 9.15 மணிக்கு நாகர்கோவில் – கோயம்புத்தூர் ரயிலுக்கு அடுத்து மதியம் 1.30 மணிக்கு திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் மட்டுமே உள்ளது. சுமார் நான்கு மணி நேரம் மதுரை மார்க்கம் எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை. எனவே இதற்கு மாற்றாக இந்த நாகர்கோவில் – கோட்டயம் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலை திருநெல்வேலி, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், துலுக்கப்பட்டி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
The post பகல் நேரங்களில் பயணிக்க வசதியாக நாகர்கோவில் – கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.