அமெரிக்காவின் உயரிய தேசிய புலனாய்வு அமைப்பான " எப்பிஐ"-யின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் படேல் (44) பகவத் கீதை மீது கைவைத்து சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் ஏற்றது இந்திய கலாச்சாரத்தை பெருமையை பிரதிபலிப்பதாக உள்ளது என அவரின் மாமாவான கிருஷ்ணகாந்த் படேல் பெருமிதம் தெரிவித்துள்ளார். பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த காஷ் படேல் நியூயார்க்கில் பிறந்திருந்தாலும் அவரது பூர்விகம் குஜராத் மாநிலம் வதேராவைச் சேர்ந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகாந்த் படேல் கூறும்போது: வெளிநாட்டில் இந்திய கலாச்சாரம் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதற்கு மருமகன் காஷ் படேலின் பதவிப்பிரமாணம் நிகழ்கால சான்றாக அமைந்துள்ளது. எப்பிஐ இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் பகவத் கீதையின் மீது கைவைத்து சத்தியம் செய்து தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டுள்ளார். இது, அவர் இந்திய கலாச்சாரத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இது, மிகப் பெரிய விஷயம். இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் இந்திய கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் கடைபிடித்து வெளிநாட்டிலும் அதனை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும்.