லூதியானா: பஞ்சாப்பில் நேற்று நள்ளிரவில் ஆம்ஆத்மி எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி, கடந்த 2022ம் ஆண்டு ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது லூதியானா சட்டமன்றத் தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பாரத் பூஷண் ஆஷுவை தோற்கடித்தார். பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு நடைபெறும் நிலையில், லூதியானாவில் நேற்றிரவு தன்னுடைய வீட்டில் குர்பிரீத் கோகி இருந்தார். வழக்கம் போல் நேற்றிரவு உணவு உட்கொண்டார். அதன்பின் நள்ளிரவு 12 மணியளவில் அவரது வீட்டிற்குள் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த குர்பிரீத் கோகியை மீட்டு டி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் எம்எல்ஏ குர்பிரீத் கோகி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ஜஸ்கரன் சிங் தேஜா கூறுகையில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் நள்ளிரவில் நடந்தது. அவரை மீட்டு டி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் தன்னைத்தானே துப்பாக்கியில் சுட்டுக் கொண்டுள்ளார்.
அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு மரணத்திற்கான காரணம் தெரியவரும். தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். ஆம் ஆத்மி எம்எல்ஏ இறந்த சம்பவம் அறிந்த அவரது ஆதரவாளர்கள் லூதியானாவில் உள்ள டிஎம்சி மருத்துவமனைக்கு வெளியே கூடினர். மருத்துவமனைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை. தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டதால் அவர் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், அவர் எந்த சூழ்நிலைகளில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை போலீசார் வெளியிடவில்லை. எம்எல்ஏ குர்பிரீத் கோகியின் மரணம் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் பதிலளிக்கவில்லை. எம்எல்ஏ குர்பிரீத் கோகி இறந்த சம்பவம் பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பகவந்த் மான், எம்எல்ஏவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் மரணம் குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஜீவன் ஜோதி கவுர், ‘இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது; என்னால் நம்ப முடியவில்லை’ என்று கவலையுடன் கூறினார்.
The post பஞ்சாப் ஆம்ஆத்மி எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை? தற்செயலாக நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் appeared first on Dinakaran.