சண்டிகர்: பஞ்சாபில் எல்லை நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபின் ஷம்பு, கனவுரி பகுதியில் விவசாயிகள் கடந்தாண்டு பிப். 13ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தலேவல் கடந்த 54 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக, மொகாலியில் ஒன்றிய குழுவினருடன் ஜக்ஜித் சிங் தலேவல் மற்றும் சர்வர் சிங் பந்தர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாத நிலையில், அவர்கள் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஷம்பு நோக்கி புறப்பட்டனர். அவர்களை மொகாலியில் பஞ்சாப் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பஞ்சாப்-அரியானா எல்லையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூடாரங்களையும் பஞ்சாப் போலீசார் இரவோடு இரவாக இடித்து தள்ளினர். இதையடுத்து ஒரு வருடத்திற்கு பிறகு ஷம்பு-அம்பாலா நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
The post பஞ்சாப் எல்லையில் பதற்றம் 200 விவசாயிகள் கைது: சாலை தடுப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.