புதுடெல்லி: காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘தேசியப் பாதுகாப்பின் நலனுக்காக, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பான விஷயங்களை ஒளிபரப்பும் போது மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக படை நகர்வுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு படைகளின் செயல்பாட்டை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். இது தற்செயலாக விரோத சக்திகளுக்கு உதவக் கூடும். அதோடு ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்’’ என கூறப்பட்டுள்ளது. கார்கில் போர், 2008 மும்பை தீவிரவாத தாக்குதல் மற்றும் கந்தகார் விமானக் கடத்தல் போன்ற கடந்த கால சம்பவங்களில் கட்டுப்பாடற்ற செய்தி வழங்கல் தேச நலனில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஒன்றிய அரசு சுட்டிக் காட்டி உள்ளது.
The post படை நகர்வு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது: ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.