திருமலை: தெலங்கானா மாநிலம், சௌடுப்பலில் உள்ள கொய்யாலா குடேம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரமவுலி, டாக்ஸி டிரைவர். இவரது மனைவி சுவர்ணா. இவர்களுக்கு ரவி தேஜா(25) என்ற மகனும், பிரீத்தி என மகளும் உள்ளனர். இந்நிலையில், சந்திரமவுலி ஐதராபாத்தில் உள்ள ஆர்கே புரம், கிரீன் ஹில்ஸ் காலனியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 2022ம் ஆண்டு தனது மகன் ரவி தேஜா, மகள் பிரீத்தியை உயர் படிப்புக்காக அமெரிக்கா நாட்டுக்கு அனுப்பினார். அதில், ரவிதேஜா தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 20ம் தேதி வாஷிங்டன் அவென்யூவில் ரவி தேஜா மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த சந்திரமவுலி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், மத்திய மற்றும் மாநில அரசு தூதரகத்தைத் தொடர்பு கொண்டு ரவி தேஜாவின் உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வருமாறு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெற்றோர் கடன் வாங்கி மகனை கஷ்டப்பட்டு அமெரிக்காவில் படிக்க வைத்த நிலையில், மர்ம நபரால் துப்பாக்கியால் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
The post பட்டப்படிப்பை முடித்து வேலை தேடி வந்தவர் அமெரிக்காவில் ஐதராபாத் இளைஞர் சுட்டுக்கொலை: உடலை கொண்டு வர பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை appeared first on Dinakaran.