
குமுளி: ஐயப்ப பக்தர்கள் பம்பையில் ஈர ஆடைகளை விட்டுச் செல்வதால் ஆறு மாசுபடும் நிலை உள்ளது. ஆகவே மண்டல காலத்துக்கு வரும் பக்தர்கள் இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ளது. இதற்காக 16-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டு டிச.27-ம் தேதி வரை தொடர் வழிபாடுகள் நடைபெற உள்ளன.
பின்பு மகரவிளக்கு பூஜை வழிபாடுகள் டிச.30-ல் தொடங்கி ஜன. 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு மாதவழிபாட்டில் லட்சக்கணக் கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவர். இந்நிலையில் மண்டல வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

