புதுடெல்லி: பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து அழிப்பதில் பாரதம் உறுதியாக இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து உலக தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று நள்ளிரவு 1.44 மணி முதல் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்த தாக்குதல் நடத்தி உள்ளது. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கார்கே உலக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்:வெள்ளை மாளிகையில் டிரம்பிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், ‘வெள்ளை மாளிகை வாசல் அருகே நடந்து வரும்போதுதான் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து அறிந்தோம். கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏதோ நடக்க போகிறது என்று எங்களுக்கு தெரியும். இந்தியாவும், பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்’ என்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா: ‘நமது ஆயுத படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதில் தான் ஆபரேஷன் சிந்தூர் ஆகும். இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து அழிப்பதில் பாரதம் உறுதியாக உள்ளது.
காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே: ‘பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்திய நமது இந்திய ஆயுத படைகளைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் மன உறுதியையும் தைரியத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த நாளிலிருந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும் எடுக்க காங்கிரஸ் ஆயுத படைகள் மற்றும் அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கிறது. காங்கிரஸ் நமது ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக நிற்கிறது. தேசிய நலன் நமக்கு மிக உயர்ந்தது’. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: பஹல்காம் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை நினைத்து பெருமை அடைகிறோம், ஜெய்ஹிந்த் .
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: ‘இந்த உலகம் பயங்கரவாதத்தை ஒரு துளி கூட சகித்து கொள்ள கூடாது. ஏற்கனவே கடந்த வாரம், அல்ஜீரியா, கிரீஸ், சியரா லியோன், கயானா, பனாமா, ஸ்லோவேனியா மற்றும் சோமாலியா உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகளுடன் பாகிஸ்தான் தொடர்பாக ஜெய்சங்கர் பேசினார். பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களில் பாகிஸ்தானும் ஒன்று. இது ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் மாறிக்கொண்டே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சிலின் தலைவர் சையத் நசெருதீன் சிஷ்டி: இந்தியா தனது வலிமையை காட்டியுள்ளது. அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வணக்கம் செலுத்துகிறேன், அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகிறேன். நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட பிரதமருக்கு நன்றி கூறுகிறேன். அவர், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்.
முதல்வர் உமர் அப்துல்லா: தீவிரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் யாரும் காஷ்மீரை விட்டு வெளியேற தேவையில்லை.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி: ‘பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நமது ஆயுதப்படைகள் நடத்திய இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை வரவேற்கிறேன். பாகிஸ்தானின் ஆழமான அரசுக்கு இன்னொரு பஹல்காம் இல்லாத அளவுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்.. #ஆபரேஷன் சிந்தூர்’ என்று பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தானின் பார்மரை சேர்ந்த ஷகூர் கான் கூறுகையில், “இந்தியா பழிவாங்கியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இந்திய ராணுவத்துடன் நிற்கிறோம். இந்தியாவுக்காக போராட தயாராக இருக்கிறோம். இந்திய ராணுவத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
இதேபோன்று ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் பிரசாத் யாதவ் உட்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் எல்லை மாவட்டங்களில் நிலவும் சூழ்நிலையை காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதுகுறித்து காஷ்மீர் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பதிவில், ‘எல்லை மாவட்டங்களில் நிலவும் சூழலை துல்லியமாக கண்காணித்து வருவதாகவும் எந்தவொரு சூழலையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர் தேசிய அளவில் முதலிடம், உலகளவில் 2வது இடம்;
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலகளவில் கவனம் பெற்றுள்ளது. சமூக வலைதளமான எக்ஸ் வலைதளத்தில் தேசிய அளவில் ஆபரேஷன் சிந்தூர் டிரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது தவிர, தேசிய அளவில் ஜெய் ஹிந்த், இந்திய ராணுவம், பாகிஸ்தான், இந்திய விமானப்படை ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் இருக்கின்றன. இந்த ஹேஷ்டேக்குகளில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை பலரும் பாராட்டி தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை மிகவும் அவசியம், பாராட்டுகள் என்று பலரும் பதிவிட்டு, இந்திய ராணுவத்தை புகழ்ந்துள்ளனர்.
‘நீதி வென்றது’; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நன்றி;
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் ஆபரேஷன் சிந்தூரை பாராட்டியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பின் மையப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் மகிழ்ச்சியை தந்துள்ளன. பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சந்தோஷ் ஜக்தலேவின் மனைவி கூறுகையில், நாங்கள் மகிழ்ச்சியில் அழுது கொண்டிருக்கிறோம். மோடி பழிவாங்கியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்ட விதம், எங்கள் கண்ணீர் நிற்கவில்லை என்றார்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி கூறுகையில், என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றார். மேலும் சுபம் திவேதியின் தந்தை சஞ்சய் திவேதி கூறுகையில், ‘நான் தொடர்ந்து செய்திகளை பார்த்து வருகிறேன். இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன், நாட்டு மக்களின் வலியை கேட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். பாகிஸ்தானில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை அழித்ததற்காக ராணுவத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்த செய்தியைக் கேட்டதிலிருந்து என் முழு குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது என்றார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ‘நீதி வென்றது’ என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
ஜம்முவின் 5 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களும் மூடல்;
ஜம்முவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதான்கோட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 72 மணி நேரம் மூடப்படும் என தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர், நாக்பூரில் கொண்டாட்டம்;
பயங்கரவாத நிலைகள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், ஜம்முகாஷ்மீர் மக்கள், அதனை கொண்டாடி வருகின்றனர். ‘இந்திய ராணுவம் ஜிந்தாபாத், பாரத் மாதா கி ஜெய்” என பொதுமக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.இதுகுறித்து காஷ்மீரை சேர்ந்த உள்ளூர் மக்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுப்பதற்காக காஷ்மீர் மக்கள் அனைவரும் காத்திருந்தோம். நாங்கள் இந்திய ராணுவத்துக்கு எப்போதும் ஆதரவாக நிற்போம். தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர். இதேபோன்று மகாராஷ்டிராவின் நாக்பூரில் தேசிய கொடியுடன் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா- பாக். மோதல்; உலகம் தாங்காது; ஐநா சபை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது. இதனையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ராணுவ கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்தார் இது தொடர்பாக பேசிய ஐநா சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐநா சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அதிகபட்ச ராணுவ நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது’ என்றார்.
வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிப்பு;
காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தரம்சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை இந்திய விமானப்படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சிவில் விமான போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தெரிகிறது.
The post பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து அழிப்பதில் பாரதம் உறுதியாக இருக்கிறது: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்; உலக தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.