டெல்லி : டெல்லியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் தலைமை இயக்குனர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டனர்.
ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ராஜீவ் காய் : நமது தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிரானது. பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிரானது அல்ல. ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்திருப்பது பரிதாபத்திற்குரியது. அதனால் தான் நாம் பதிலடி கொடுத்திருப்பதை தேர்ந்தெடுத்தோம். பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தந்தபோதும் அந்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தாக்குதல் நடத்தினோம்.
வான் நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ஏ.கே.பாரதி : இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய, நீண்ட தூர ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது.அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலளிக்கும் விதமாக கராச்சி, லாகூர் தளங்களில் நாம் தாக்குதல் நடத்தினோம். வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அழித்தோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாக். ராணுவம் நடத்திய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாக். போர் விமானம் தாக்கி அழிக்கப்பட்டது.ஆகாஷ் ஏவுகணை அமைப்பு மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தோம்.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை கடந்து தீவிரவாதிகளால் நுழைய முடியாது. பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணை பாகங்கள் சேகரிக்கப்பட்டு நம்மிடம் உள்ளன. பாகிஸ்தான் ஏவிய சீனாவின் பி.எல்.15 ரக ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளோம். சீனாவின் ஏவுகணைகளைதான் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை பயன்படுத்தி வந்தது. சீனாவின் PL-15 வகை ஏவுகணைகளை இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்தது. முப்படைகளும் மிகச்சீரிய முறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு பதிலடி கொடுத்தது. தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
கடல் நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் பிரமோத் : பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து படைப்பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன. போர்க்கப்பல்ல் இருந்து போர் விமானங்களை இயக்கவல்ல சக்தி கொண்டதாக கடற்படை இருக்கிறது.
The post பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது : முப்படைகளின் தலைமை இயக்குனர்கள் பேட்டி appeared first on Dinakaran.