காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகானாபுரம் உள்ளிட்ட கிராம மக்களை, ஜன-19 மற்றும் 20 தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து பேச, அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி அக்கட்சியின் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையிலான நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, 13 கிராமங்களைச் சேர்ந்த 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்தும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.