திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 75 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது பல மாநிலங்களில் தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் சிபிஎஸ்இ வகுப்புகளுக்கு தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வெளிமாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி நேற்று ஒரேநாளில் 75,354 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 28,510 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.3.54 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி ஏடிசி காட்டேஜ் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதியை ஒட்டிய பகுதிகளில் உள்ள பிற கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சித்தூர் அருகே உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி, சந்திரகிரி கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில்களிலும் நீண்டகியூவில் காத்திருந்து பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
The post பள்ளி விடுமுறையால் பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 75 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.