பெங்களூரு: பழங்குடியினத்தைச் சேர்ந்த நபரை சாதிய ரீதியில் அவமானப்படுத்திய புகாரில் இன்போசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி, எஸ்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த போவி பழங்குடியினத்தை சேர்ந்த துர்க்கப்பா என்பவர் இந்திய அறிவியல் மையத்தில் 2014ம் ஆண்டு பணியாற்றினார். அப்போது அவர் மீது போலியான பாலியல் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்விவகாரம் ெதாடர்பாக துர்க்கப்பா சதாசிவ நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில் சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் தான் ஆளாக்கப்பட்டதாக துர்க்கப்பா குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது பணிநீக்கம் குறித்து இந்திய அறிவியல் மையமோ, அதன் அறங்காவலர் குழுவில் இருந்த இன்போசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட யாரும் எதிர்வினையாற்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து கோவிந்தன் ரங்கராஜன், சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேரின் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
The post பழங்குடியினத்தை சேர்ந்தவர் அளித்த புகாரில் ‘இன்போசிஸ்’ நிர்வாகி உட்பட 18 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.