*குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்கள் புகார்
கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர்.
இந்த மனுவில், ‘‘நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 1800 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. இதில் வசிப்பவர்கள் பெரியநாயக்கன்பாளையத்திற்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 3 கி.மீ. தூரம் செல்லவேண்டியிருக்கிறது. இங்கே இருந்து சென்று வர போதுமான பஸ் வசதி கிடையாது.
இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பஸ் மற்றும் ரோடு வசதி இல்லாததால் நடந்தே சென்று வர வேண்டிய நிலைமை இருக்கிறது. இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது ரோடு போட நிதி வசதி இல்லை எனக் கூறிவிட்டார்கள்.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நாங்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறோம். உடனடியாக ரோடு மற்றும் பஸ் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுவில், ‘‘கடந்த ஒன்றரை ஆண்டில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அடிக்கடி விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. கட்டுமான பொருட்கள் ஏறக்குறைய 100 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்து விட்டது. இதனால் கட்டிடம் கட்டுவது மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும். கல் குவாரிகளை அரசு உடைமையாக மாற்றினால் அரசுக்கு ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கட்டுமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும். ஆற்று மணல் குவாரிகளை விரைவில் திறக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.
இருகூர் பகுதி குடியிருப்பு சங்கத்தினர் அளித்த புகார் மனுவில், ‘‘இருகூரில் போதுமான பஸ் வசதி கிடையாது. உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர கூடுதல் பஸ்கள் தேவை. ரோடு குறுகலாக இருக்கிறது. பல இடங்களில் ரோடு பழுதாகி மேடு பள்ளமாக இருக்கிறது. தோண்டி போட்ட ரோடுகளை சீரமைக்கவில்லை. மயானத்தில் இடமின்றி ரோட்டோரம் சடலம் புதைக்க வேண்டியிருக்கிறது’’ என கூறியுள்ளனர்.
இந்து மக்கள் கட்சியினர் அளித்த மனுவில், ‘‘தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டம் அமலாக்கப்பட்டிருக்கிறது. ஆர்டிஇ என்ற இந்த திட்டத்தில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும். ஆனால் இந்த கல்வி கட்டணத்தை அரசு செலுத்தாமல் இருப்பதாக தெரிகிறது. இதனால் கல்வி நிறுவனத்தினர் மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் அரசு அலுவலர்கள் குடியிருப்பு சங்கத்தினர் அளித்த மனுவில், ‘‘கவுண்டம்பாளையம் பகுதியில் 1,848 அடுக்குமாடி வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டது. இங்கே பல ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வீட்டு வசதி வாரியம் இடம் ஒதுக்கி தர வேண்டும். பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி விரைவாக இடம் ஒதுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.
The post பஸ் வரவில்லை… ரோடு ரொம்ப மோசம்… appeared first on Dinakaran.