புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அசாதாரண சூழலால் தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். அதேபோல் அமெரிக்கா, பெரு சென்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நாடு திரும்புகிறார். தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
ஜம்மு – காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் இருக்கும் பைசாரன் பள்ளத்தாக்குக்கு நடந்தோ அல்லது குதிரை சவாரி மூலமாகவோ சென்றடைய முடியும். அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடமானது ‘சிறிய ஸ்விட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று கூடியிருந்தபோது, பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டினர், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால், உளவுத்துறை அதிகாரி மனிஷ் ரஞ்சன் உட்பட 26 பேர் பலியாகினர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளத்தைச் சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சந்துரு, பாலசந்திரா ஆகிய மூவர் உள்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். சில நிமிடங்களில் நடந்து முடிந்த தாக்குதல் சம்பவத்தால், சுற்றுலா பயணிகள் பெரும் பீதியில் உறைந்திருந்தனர். தாக்குதல் குறித்த தகவலறிந்ததும் ராணுவம், சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஹெலிகாப்டர் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். உள்ளூர் மக்களும் காயமடைந்தவர்களில் சிலரை தங்கள் குதிரைகளில் ஏற்றி பஹல்காம் நகருக்கு அழைத்து வந்தனர். தீவிரவாதிகளைக் கண்டறிய தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர். இக்கொடூர தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட ‘லஷ்கர்-ஏ-தொய்பா’ தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஜம்முவின் கிஷ்த்வாரில் எல்லை கடந்து, கோகர்நாக் வழியாக பைசாரனுக்கு வந்திருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு நகர் விரைந்தார். அவர் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இன்று அவர் தாக்குதல் நடந்த பஹல்காமை பார்வையிடுகிறார். இதற்கிடையே நேற்று சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்திலேயே பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதேபோல் அமெரிக்கா, பெரு நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள ஒன்றிய நிதி மற்றும் பெருநிறுவன விவகார துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது அதிகாரப்பூர்வ பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்புவதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவமானது வரும் ஜூலையில் ெதாடங்கும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையிலும், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்துவரும் அமெரிக்காவிற்கு பாடம் கற்பிக்கும் வகையிலும் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றி உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீதான காஷ்மீர் தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரெஸ், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் அப்துல் நாசர் அல்ஷாலி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களின் உரையாடலின் போது, அதிபர் டிரம்ப் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும், தனது அனைத்து ஆதரவையும் அமெரிக்கா வழங்குவதாக உறுதியளித்தார். அதிபர் டிரம்ப் அளித்த ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளையும் கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை ஆதரிப்பவர்களையும் நீதியின் முன் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முடிவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி, இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆளும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியும், இந்த முழு அடைப்புக்கு ஆதரவளித்தது. நேற்றிரவு பஹல்காமில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சோபூர், கந்தர்பால், ஹந்த்வாரா, பந்திபோரா மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு படைகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு பைக் மீட்கப்பட்டது. கருப்பு நிற பைக்கில் நம்பர் பிளேட் இல்லை. இந்த பைக்கில் 3க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கலாம். நேற்று மாலை தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடங்கியது முதல் இன்று வரை தீவிரவாதிகளை சுற்றிவளைக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் விடியவிடிய தேடுதல் வேட்டை நடத்தினர். தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தப்படுமா? என்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு, புல்வாமாவில் 47 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த தற்கொலைப் படை தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதையடுத்து பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜம்மு – காஷ்மீர் உட்பட முக்கியமான மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். குறிப்பாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக அத்தகைய பகுதிகளில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார். இம்மனு மீதான விசாரணை ஓரிரு நாளில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு – காஷ்மீரின் உரி பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற ஆயுதம் ஏந்திய இரண்டு தீவிரவாதிகள் இன்று காலை இந்திய பாதுகாப்புப் படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சண்டை நடந்த பின்னரே, இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
The post பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: ஜம்மு – காஷ்மீரில் முழு அடைப்பு; தீவிரவாத தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.