இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கு மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் திடீரென ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் ஒரு வெறிச்சோடிய பகுதியில் நின்றுள்ளது. இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். அப்போது, ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.