சென்னை: பாகிஸ்தானுக்கு டிரோன்கள் வழங்கி ஆதரவாக செயல்பட்ட துருக்கி நாட்டின் செலிபி ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்திய விமான நிலையங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் நேற்று இரவு 8 மணிக்கு உடனடியாக அமலுக்கு வந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த செலிபி ஏவியேஷன் இன் இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை விமானத்தில் ஏற்றுவது, விமானத்தில் இருந்து கீழே இறக்குவது போன்ற பணிகளுக்கான கிரவுண்ட் ஹேண்ட்லிங் எனப்படும் அடிமட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதற்காக, துருக்கி நாட்டு நிறுவனம், இந்திய அரசுடன் ஏற்கனவே சுமார் ஓராண்டுக்கு முன்னதாக ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தது.
இதில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் சென்று வருவதற்கான பாஸ்கள், பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி என்ற நிறுவனம் வழங்கி உள்ளது. இதற்கிடையே, தற்போது இந்தியா- பாகிஸ்தான் போரின்போது, துருக்கி நாடு பகிரங்கமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் துருக்கி நாட்டின் நிறுவனம், நமது நாட்டின் பாதுகாக்கப்பட்ட விமான நிலையங்களில் பணியில் இருக்க தகுதி இல்லை என்ற ஒரு பிரச்னை எழுந்தது. இதையடுத்து பிசிஏஎஸ், இந்தியாவில் இந்த துருக்கி நாட்டு நிறுவனம், எந்தெந்த விமான நிலையங்களில் அடிமட்ட பணிகளில் உள்ளது என்ற கணக்கை அவசரமாக எடுத்தது.
அப்போது, இந்தியாவில் மும்பை, டெல்லி, கொச்சி, கண்ணூர், பெங்களூரு, ஐதராபாத், கோவா, அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய 9 விமான நிலையங்களில் கிரவுண்ட் ஹேண்டிலிங் பணியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, டெல்லியில் உள்ள பிசிஏஎஸ் தலைமையகம், இந்த செலிபி ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடைவிப்பதோடு, அதில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு பிசிஏஎஸ் வழங்கிய பாஸ்கள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தது. இதற்கான உத்தரவுகள் டெல்லி, மும்பை விமான நிலையத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட 7 விமான நிலையங்களுக்கு நேற்று இரவு 8 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை விமான நிலைய உயர்அதிகாரிகள் இரவு 8.5 மணிக்கு இந்த உத்தரவை சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தினர். சென்னை விமான நிலையத்தை பொறுத்தமட்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், கேத்தே பசிபிக் ஏர் லைன்ஸ், யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 6 விமாமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும், பயணிகளின் உடைமைகளை ஏற்றி இறக்கும், கிரவுண்ட் ஹேண்ட்லிங் பணியில் இருப்பதாகவும், அதோடு ஓரிரு கார்கோ விமானங்களுக்கு கிரவுண்ட் ஹேண்டிலிங் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இந்த செலிபி ஏவியேஷன் நிறுவனத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பிசிஏஎஸ் பாஸ்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த பாஸ்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்த விமானங்களில் வரும் பயணிகள் உடைமைகள் யார் கையாளுவார் என்ற பிரச்னையும் எழுந்தது. ஆனால் சென்னை விமான நிலையத்தில் செலிபி ஏவியேஷன் தவிர, ஏர் இந்தியா நிறுவனம், கிரவுண்ட் ஹேண்டிலிங்கில் பலம் வாய்ந்ததாக இருப்பதாகவும், அது தவிர வேறு ஒரு சில கிரவுண்ட் ஹேண்டிலிங் ஒப்பந்த நிறுவனங்கள் இருப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
The post பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி நாட்டின் செலிபி ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்திய விமான நிலையங்களில் தடை: சென்னையிலும் உடனே அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.