கவுகாத்தி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகின்றார். இவர் கடந்த 2023ம் ஆண்டு ஏஜெண்ட் மூலமாக விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றார். அப்போது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் எனப்படும் எஹ்சான் உர் ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த டேனிஸ் 2025ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். அவர் பல பாகிஸ்தான் உளவு நிறுவனங்களை ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்ததாக தெரிகிறது.
ஜோதி வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்டவற்றின் மூலமாக பாகிஸ்தானை சேர்ந்த பலருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தியா குறித்த பல முக்கியமான தகவல்களை ஜோதி அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் குறித்த நேர்மறையான கருத்து மற்றும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் ஜோதி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜோதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் எழுத்து மூலமாக வாக்குமூலம் பெறப்பட்டு இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜோதி மட்டுமல்லாமல் பஞ்சாபின் மலேர்கோட்லாவை சேர்ந்த கணவரை இழந்த குசாலா, இவரது தோழி பானு நஸ்ரீனா, யாமீன் முகமது, தேவிந்தர் சிங் மற்றும் அர்மான் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 5 நாள் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
அசாமில் 65 பேர் கைது
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அசாமில் பாகிஸ்தானை ஆதரித்ததற்காக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாமில் மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இதுவரை 65 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
The post பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா பெண் யூடியூபர் ஜோதி கைது appeared first on Dinakaran.