புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எதிரிநாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், குதிரை ஓட்டுபவர் ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது.
இதுவரை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை. ஆனாலும் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து எல்லைதாண்டி நுழைந்தவர்கள் என்றும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இந்திய புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனால், தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இறக்குமதிக்கு முழு தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. சிந்து நதி நீரை தடுத்தால் அது போராக கருதப்படும் என கூறியிருக்கும் பாகிஸ்தான் அத்தகைய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டால், சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக எச்சரித்துள்ளது.
இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இதில், பாகிஸ்தானுக்கு எத்தகைய பதிலடி தருவது என்பது குறித்து தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, முப்படைகளும் கடந்த சில நாட்களாக போர் ஒத்திகையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதியும், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்கும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது கடற்படை மற்றும் விமானப்படைகளின் போர் பயிற்சி குறித்தும் தயார் நிலை குறித்தும் அவர்கள் பிரதமர் மோடியிடம் விளக்கினர்.
இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக நேற்று பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் நமது ராணுவம் பாகிஸ்தானுக்கு எந்த வகையான பதிலடி தருவது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதல் நடந்து இதுவரை 12 நாட்களான நிலையில், கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து பாதுகாப்பு தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல, பாகிஸ்தானும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு போருக்கு தயாராகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போருக்கு முன்பாக நாட்டு மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள இதுபோன்ற ஒத்திகைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஒத்திகையில் 5 முக்கிய விஷயங்களை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
* எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு உடனடியாக செயல்படும் வகையில் பரிசோதித்தல்.
* எதிரிநாட்டு தாக்குதலின் போது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை, முதற்கட்ட மருத்துவ உதவி, எச்சரிக்கை குறியீடுகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படையான ராணுவ நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
* வான்வழி தாக்குதல் நடக்கும் சமயத்தில், எதிரிகள் குடியிருப்புகளை கண்டறிவதை தடுக்க, மின் சேவையை முழுமையாக நிறுத்தி இருளில் மூழ்கடிக்கும் நடைமுறைகளை செயல்படுத்துதல்.
* அனல்மின் நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைதொடர்பு மையங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் தொழில்நுட்பங்கள்.
* அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டங்கள் குறித்து ஒத்திகை பார்த்தல்.
மேற்கண்ட பயிற்சிகளை போர்கால ஒத்திகையில் மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது, போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
1. எதிரி நாட்டு விமானத் தாக்குதல் குறித்து மக்களை எச்சரிக்கும் சைரன்களை சோதித்தல்.
2. தாக்குதல் நடந்தால் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை, முதற்கட்ட மருத்துவ உதவி குறித்து பயிற்சி அளித்தல்.
3. வான்வழி தாக்குதலில் இருந்து தப்பிக்க நகரத்தையே இருளில் மூழ்கடிப்பு.
4. முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் நடவடிக்கை.
5. அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் ஒத்திகை.
* இந்தியாவுக்கு முழு ஆதரவு: ரஷ்ய அதிபர் புடின் உறுதி
போர் பதற்றத்திற்கு மத்தியில், பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் புடின், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இந்த கொடூர தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என குறிப்பிட்ட அதிபர் புடின், தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய புடின், அதற்கான அனைத்து உதவிகளும் இந்தியாவுக்கு செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அனைத்து செயல்களுக்கும் முழுமையான ஆதரவு தருவதாகவும் அதிபர் புடின் கூறியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக எந்த சமரசமற்ற பதிலடி தர வேண்டுமென இரு தலைவர்களும் கூறி உள்ளனர். மேலும், வருடாந்திர இருதரப்பு உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதை அதிபர் புடின் ஏற்றுக் கொண்டதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நிற்கும் நிலையில், இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* 1971க்குப் பிறகு முதல் முறையாக
கடந்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட போது, இதுபோன்ற போர்க்கால ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பிறகு முதல் முறையாக தற்போதுதான் போர்க்கால ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரோஷ்பூரில் கன்டோன்மென்ட் பகுதியில் இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட்டு ஒத்திகைகள் பார்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அரை மணி நேரம் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* ராணுவ கல்வி நிறுவன வெப்சைட்கள் முடக்கம்
போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்தியாவுக்கு எதிராக சைபர் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ராணுவ கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. கடந்த 25ம் தேதி ஜலந்தர் கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ நர்சிங் கல்லூரி இணையதளம் ஹேக் செய்யப்பட்டு கிராபிக் காட்சிகள் வெளியிடப்பட்டன. காஷ்மீரில் உள்ள 2 ராணுவ பப்ளிக் பள்ளிகளின் இணையதளம் நேற்று முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 ராணுவ பள்ளிகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சைபர் தாக்குதலை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* ஜப்பானும் ஆதரவு
இந்தியா வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நகாதனியை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் நாச வேலைகள் செய்ய எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சம் நகாதனி இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார்.
* அரசியல் கட்சிகளிடம் பாக். ராணுவம் விளக்கம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா உடனான பதற்றம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தது. இதற்கான கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி மற்றும் தகவல் துறை அமைச்சர் அட்டவுல்லா தரார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது, இந்தியா ஏதேனும் துரதிஷ்டவசமான செயல்களில் ஈடுபட்டால் வலுவான பதிலடி தர வேண்டும் எனவும் அதற்காக ராணுவத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். இக்கூட்டத்தல் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி மட்டும் பங்கேற்காமல் புறக்கணித்தது.
* தவறு செய்யாதீர்கள் போர் வேண்டாம்: ஐநா
பஹல்காம் தாக்குதல் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டது. இதை தொடர்ந்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்ச நிலையில் உள்ளது கவலையை அளிக்கிறது. இருநாடுகளும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடித்து போர் விளிம்பிலிருந்து பின்வாங்க வேண்டும். எந்த தவறும் செய்யாதீர்கள், ராணுவத் தீர்வு தீர்வாகாது. பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. போர் பதற்றத்தை குறைத்தல் மற்றும் அமைதிக்கான உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க ஐ.நா தயாராக உள்ளது என்றார்.
* சிந்து நதி நீரை நிறுத்தினால் அணு ஆயுதம் மூலம் பதிலடி
ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது கலித் ஜமாலி, மாஸ்கோவதில் ரஷ்ய அரசு டிவி சேனலான டிஏஎஸ்எஸ்க்கு அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினாலோ, சிந்து நதி நீரை தடுத்தாலோ அணு ஆயுதம் உட்பட முழு பலத்தையும் பயன்படுத்தி பதிலடி தருவோம். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் இரு நாடுகளும் அணு ஆயுத சக்திகளாக இருப்பதால் பதற்றத்தை தணிக்க வேண்டிய அவசியம் இன்னும் அதிகமாக உள்ளது’’ என்றார். முன்னதாக, நேற்று முன்தினம் பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் தொலைபேசியில் பேசிய போது, இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்க உதவுமாறு வலியுறுத்தி உள்ளார்.
* பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை
இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் 2வது முறையாக நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது. தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் பதா வகை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். இந்த ஏவுகணை 120 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது.
The post பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: எதிரி நாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி; அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.