புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பழிக்குப்பழிவாங்கியது. பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ள 9 தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்து அழித்தது. இதில் 70 பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப். 22 ஆம் தேதி 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கிய இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா உரிய முறையில் பதிலடி கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி தினமும் பாதுகாப்பு படையினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் முறை, இலக்குகள் மற்றும் நேரம் குறித்து முடிவு செய்யும் முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 29 அன்று அனைத்து ஆயுதப்படைகளுக்கும் வழங்கினார். இந்த சூழலில் நேற்று அதிகாலை 1.05 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் புகுந்து இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த தாக்குதல் சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. பாகிஸ்தானில் சியால்கோட்டில் உள்ள சர்ஜால் முகாம், மெஹ்மூனா ஜோயா, மர்காஸ் தைபா, முரிட்கே, பஹாவல்பூரில் உள்ள மர்காஸ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், முசாபராபாத்தில் உள்ள சவாய் நாலா, சையத்னா பிலால், கோட்லியில் உள்ள குல்பூர், அப்பாஸ் முகாம்கள், பிம்பரில் உள்ள பர்னாலா முகாம் ஆகியவை முற்றிலும் தகர்க்கப்பட்டன. இதில் பஹால்வல்பூர் முகாம் இந்திய எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது. அந்த இடத்தையும் இந்திய பாதுகாப்பு படையினர் துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தனர். பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி முகாம்கள், ஏவுதளங்கள் மற்றும் தலைமை அலுவலகங்கள் தான் இந்தியாவின் குறியாக இருந்தது. பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எதுவும் இந்தியாவின் தாக்குதலில் இடம் பெறவில்லை. அதே போல் பாக். மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படாமல் இந்தியா துல்லியமாக தவிர்த்தது. இந்தியா தாக்கிய போது இந்த தீவிரவாத முகாம்களில் ஏராளமான பயங்கரவாதிகள் இருந்தனர்.
அவர்கள் அத்தனை பேரும் பலியானார்கள். அதிகாலையில் நடந்த இந்த தாக்குதலில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். அத்தனை பேரும் தீவிரவாதிகள். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலால் இருநாடுகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான் பதிலடி தருவதை தடுக்க எல்லையில் முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டன. இதையும் மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 12 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் புகுந்து நடத்தப்பட்ட அதிகாலை தாக்குதல் குறித்து ஒன்றிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸின் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் ஹெலிகாப்டர் விமானி விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தாக்குதல் நடவடிக்கை முடிந்ததும் அவர்கள் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பிரதமர் மோடி நேரடியாக கண்காணித்ததாக அவர்கள் தெரிவித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்ததும் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் வெற்றிகரமான தாக்குதல்களுக்கு இந்திய ஆயுதப் படைகளை பிரதமர் மோடி பாராட்டினார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பாதுகாப்பு படையினரின் அதிரடி பதில் தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
The post பாகிஸ்தான் மீது இந்தியா குண்டு வீச்சு: 9 தீவிரவாத முகாம்கள் தரைமட்டம்; 70 தீவிரவாதிகள் பலி: பஹல்காம் தாக்குதலுக்கு நள்ளிரவில் பதிலடி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் அதிரடி appeared first on Dinakaran.