சத்ரபதி சம்பாஜி நகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் அது நடக்கவில்லையென்றால் மேலும் பல போர்களை நடத்த வேண்டியிருக்கும் என்று ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே எச்சரித்துள்ளார். ஒன்றிய சமூகநீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே நிருபர்களிடம் கூறுகையில்,‘‘பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. சில நாட்களாக போர் நிறுத்தம் உள்ளது. ஆனால் நமது ராணுவம் அந்த நாட்டுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்றுள்ளோம்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்பது உண்மையல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளது. காஷ்மீர் விஷயத்தில் சமரசம் செய்ய எந்த ஒரு மூன்றாம் தரப்பினருக்கும் உரிமை இல்லை.பாகிஸ்தான் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கூறியுள்ளேன். பாகிஸ்தான் அதை ஒப்படைக்கவில்லை என்றால், அதை மீட்டெடுக்க நாம் இன்னும் பல போர்களை நடத்த வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.
The post பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்காவிட்டால் பல போர்கள் நடக்கும்: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே எச்சரிக்கை appeared first on Dinakaran.