புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி குறித்து ஆலோசிக்க டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ , மாநிலங்களவை பாஜ தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டனர். மேலும், திரிணாமுல் எம்பி சுதிப் பந்தோபாத்யாய,என்சிபி(எஸ்பி)எம்பி சுப்ரியா சுலே,என்சிபி எம்பி பிரபுல் படேல், ஏஐஎம்ஐஎம் எம்பி ஓவைசி,சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்,ஆர்ஜேடி எம்பி பிரேம்சந்த் குப்தா,சமாஜ்வாடி எம்பி ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பஹல்காம் தாக்குதலில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பிரச்னையை எழுப்பினர். ஆனால், தீவிரவாதம் குறித்த பிரச்னையில் அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த ஆம் ஆத்மி எம்பி சுஞ்சய் சிங்,பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின என்றார்.
சுதீப் பந்தோபாத்யாய, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் நலனுக்காக எந்த முடிவுகளை எடுத்தாலும், அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்கும் என்று உறுதியளித்தோம் என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த கொடூரமான தாக்குதலை அனைத்து கட்சிகளும் கண்டிப்பதாகவும், ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சி முழு ஆதரவையும் அளிக்கிறது என்று கூறினார்.
திருச்சி சிவா பேட்டி: திமுக தரப்பில் கலந்து கொண்ட எம்.பி திருச்சி சிவா அளித்த பேட்டியில்,‘‘ கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்தோம். தீவிரவாத நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் தீவிரவாத செயல் இனியும் நாட்டில் தொடரக் கூடாது என்றும் வலியுறுத்தினோம்.குறிப்பாக தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஆதரவு அளிக்கும் என்றார்.
* இந்தியா மீதான நேரடி தாக்குதல்: காங்கிரஸ்
டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்துதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், “ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் இரங்கல் தெரிவிக்கிறது. பாகிஸ்தானால் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிக கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் இந்திய குடியரசு மீதான நேரடி தாக்குதல். நாடு முழுவதுமுள்ளவர்களின் உணர்வுகளை தூண்டுவதற்காகவே இந்துக்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர். ஒற்றுமை மற்றும் அமைதி தேவைப்படும் இந்த தருணத்தில் அதிகாரப்பூர்வ மற்றும் பினாமி சமூக ஊடகங்கள் மூலம் பிரிவினையை ஊக்குவிக்க இந்த துயர சம்பவத்தை பாஜ பயன்படுத்தி கொள்கிறது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
The post பாக்.கில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.