ராய்ப்பூர்: பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த சட்டீஸ்கர் நடிகர் ராஜேஷ் அவஸ்திக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். சட்டீஸ்கர் மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், நடிகருமான ராஜேஷ் அவஸ்தி (42), கரியாபந்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், ராஜேஷ் அவஸ்தி உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஷ் அவஸ்தியின் எதிர்பாராத மறைவுக்கு, அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சட்டீஸ்கர் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரும், தயாரிப்பாளரும், பாஜகவின் கலாசார பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ராஜேஷ் அவஸ்தியின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சட்டீஸ்கர் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் முதல் தலைவராகவும், நாட்டுப்புற கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை மேம்படுத்துவதில் முன்மாதிரியாகவும் இருந்தார். அவரது மறைவு சட்டீஸ்கர் திரைப்படத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் கூறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சட்டீஸ்கர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் மனோஜ் வர்மாவும் தனது இரங்கலைப் பகிர்ந்து கொண்டார். ராஜேஷ் அவஸ்தியின் இறுதி சடங்குகள் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள மோக்ஷதம் மகாதேவ் காட் பகுதியில் நடைபெற்றன. ராஜேஷ் அவஸ்தியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
The post பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த சட்டீஸ்கர் நடிகர் மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.