இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி மக்களுக்கு இடையே மோதல் வெடித்ததில், மாநிலத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 250 பேர் கொல்லப்பட்டனர்.இனக்கலவரம் சற்று ஓய்ந்திருந்தாலும் திடீர் திடீரென மோதல்கள் ஏற்படுவதால் பதற்றம் ஏற்படுகிறது.
சமீபத்தில் மணிப்பூர் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் 8 முதல் மணிப்பூரின் அனைத்து சாலைகளும் திறக்கப்பட்டு, மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இரண்டாண்டுகளுக்கு பிறகு மணிப்பூரில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது. சூராசந்த்பூர் புறப்பட்ட பேருந்து எந்த இடையூறுகளும் இல்லாமல் சென்றது. ஆனால் சேனாபதி மாவட்டத்துக்கு சென்ற பேருந்து குக்கி இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் காங்போக்பி மாவட்டம் காம்கிபாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
காம்கிபாய், மோட்பங் மற்றும் கீதெல்மன்பி உள்ளிட்ட மாவட்டங்களில் குக்கி சமூகத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் லால்கவுதாங் சிங்சிட் என்ற குக்கி போராட்டக்காரர் உயிரிழந்தார். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை கண்டித்து குக்கி சமூகத்தினர் காலவரயைற்ற கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.இதனால் குக்கி சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
The post பாதுகாப்பு படையினரை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.