சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.