திருவனந்தபுரம்: சித்திரை விஷு என்பதால் கடந்த சில தினங்களாகவே கேரளாவில் அனைத்து மதுக்கடைகள் முன்பும் ‘குடிமகன்’களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியில் கரிம்பனக்கடவு என்ற பகுதியில் ஒரு அரசு மதுபானக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்தக் கடை முன் மது வாங்குவதற்காக நீண்ட வரிசை காணப்பட்டது. அப்போது வரிசையில் ஒரு 10 வயது சிறுமி நிற்பதை பார்த்த குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுமியை தந்தை தான் மது வாங்குவதற்கு வரிசையில் நிறுத்தினார் என பின்னர் தெரியவந்தது.
அந்த நபரிடம் மகளை வரிசையில் நிறுத்த வேண்டாம் என்று அங்கு இருந்தவர்கள் கூறினர். ஆனால் அதைக் கேட்க அந்த நபர் தயாராக இல்லை. அந்த சிறுமி மது வாங்க வரிசையில் விற்பதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். நிமிட நேரத்தில் இந்த வீடியோ வைரல் ஆனது. மது வாங்குவதற்கு சிறுமியை வரிசையில் நிறுத்திய தந்தைக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து அறிந்த திருத்தாலா போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தையை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
The post பாலக்காடு அருகே மது வாங்க 10 வயது சிறுமியை வரிசையில் நிறுத்திய தந்தை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.