பாட்னா: முன்னாள் ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி பாஜ கூட்டணியில் இருந்து விலகியது. பீகார் மாநிலத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிய கட்சி லோக்ஜனசக்தி. அவரது மறைவுக்கு பிறகு ஏற்பட்ட பிளவால் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராஸ் தலைமையில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரீய லோக்ஜனசக்தி கட்சி பா.ஜ கூட்டணியில் இணைந்தது. பராஸ் ஒன்றிய அமைச்சராக இருந்தார். 2024 மக்களவை தேர்தலில் பராஸ் கட்சிக்கு பா.ஜ கூட்டணியில் இடம் வழங்கப்படவில்லை.
மாறாக பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் செயல்படும் கட்சிக்கு பா.ஜ சீட் வழங்கியது. மேலும் சிராக் தற்போது ஒன்றிய அமைச்சராக உள்ளார். வரும் அக்டோபரில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி விலகுவதாக பசுபதிகுமார் பராஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ நான் 2014 முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறேன். இனிமேல் என் கட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இருக்காது என்று அறிவிக்கிறேன்’ என்றார்.
*ஒன்றிய அமைச்சர் அதிருப்தி
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஒன்றிய அமைச்சருமான ஜிதன்ராம் மஞ்சி தலைமையில் செயல்படும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜிதன் ராம் மஞ்சி ‘‘இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தொண்டர்கள் பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக உணர்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலின்போது எங்களது கவலைகள் தீர்த்து வைக்கப்படும் என்று பாஜ தலைவர் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
The post பா.ஜ கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி விலகல் appeared first on Dinakaran.