டெல்லி: நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி ஜிஎஸ்டி ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இது 9.1 சதவீதம் அதிகமாகும். அரசுத் தரவுகளின்படி, பிப்ரவரியில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,83,646 கோடியாகும். இதில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.35,204 கோடி ஆகும். மாநில ஜிஎஸ்டி ரூ.43,704 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.90,870 கோடி, இழப்பீட்டு வரி ரூ.13,868 கோடி உள்நாட்டு வருவாய் மூலம் ரூ.1.42 லட்சம் கோடியும், இறக்குமதி வருவாய் மூலம் ரூ.42,702 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இவை முறையே 10.2 சதவீதம், 5.4 சதவீதம் அதிகரிப்பாகும். பிப்ரவரியில் திருப்பி அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.20,889 கோடி. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 17.3 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.68 லட்சம் கோடியாகும்.
கடந்த ஜனவரியில் வசூலான ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடி. இது ஜிஎஸ்டி அமல் ஆனதில் இருந்து கிடைக்கப் பெற்ற இரண்டாவது அதிகபட்ச வருவாயாகும். அதேநேரம், பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி வசூல் ஆனது இதுவரை அதிகபட்ச வருவாயாக உள்ளது.
The post பிப்ரவரி மாத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.