ராய்பூர்: “இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான தாக்குதல்கள், இந்தியாவுக்கும், ராணுவ வீரர்களுக்கும் எதிராக மாற கூடாது” என ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தி உள்ளார்.
சட்டீஸ்கர் மாநில அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சட்டீஸ்கர் சென்றுள்ள சிவ்ராஜ் சிங் சவுகான், ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது ஆயுத படைகள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தன.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து முழு நாடும் பெருமை கொள்கிறது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்திய விமானப்படை வைக்கோல் போல் பறந்து போக வைத்தது. நமது துணிச்சலான ஆயுத படைகளின் வீரத்துக்கும், அவர்களின் குறி பார்க்கும் திறனுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். பாகிஸ்தானின் எந்த பகுதியும் நமது இலக்குகளிலிருந்து தப்பவில்லை. இந்தியா – பாகிஸ்தான் போர் விவகாரத்தில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்த எதிர்ப்பு நாட்டுக்கும், இந்திய ராணுவத்துக்கும் எதிராக மாறி விட கூடாது” என தெரிவித்தார்.
The post பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்கள் நாட்டுக்கும், ராணுவத்துக்கும் எதிராக மாற கூடாது: ஒன்றிய அமைச்சர் சவுகான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.