புதுடெல்லி: பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் 9,31,644 நிறுவனங்களுக்கு பூட்டு போடப்பட்டதாகவும், 5 கோடி பேர் வேலை இழந்துள்ளதாகவும் ஏஐ தொழில்நுட்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சாட்போட், க்ரோக் அளித்த பதிலில் அம்பலமாகி உள்ளது.
ஒன்றிய பாஜக அரசு ‘வேலைவாய்ப்புகளை வழங்குவோம்’ என்ற வாக்குறுதிகளுக்கு மாறாக, இருக்கும் வேலைகளையும் பறிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, இருக்கும் நிறுவனங்களுக்கும் பூட்டு போடும் நிலையை உருவாக்கியுள்ளது. புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை (பிஎஸ்யு) மலிவு விலைக்கு விற்பனைக்கு வைத்துள்ளது. ஊக்கத்தொகை திட்டங்களை அறிவிப்புகளோடு நிறுத்திவிட்டது. மோடியின் பதினொரு ஆண்டு ஆட்சியில் நாட்டில் தொழில்துறை சீர்குலைந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ முழக்கம், நிறுவனங்கள், பிஎஸ்யுக்கள், வேலைவாய்ப்புகள் குறித்து கேட்ட பல கேள்விகளுக்கு ஏஐ – சாட்போட், ‘க்ரோக்’ ஆகிய தளங்கள் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும் ஒன்றிய பாஜக அரசின் வெற்று வாக்குறுதிகளை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
நிறைவேறாத ‘மேக் இன் இந்தியா’ இலக்கு
பிரதமர் மோடி அதிகாரத்திற்கு வந்த ஆரம்ப நாட்களில் மிகவும் ஆரவாரமாக அறிவித்த ‘மேக் இன் இந்தியா’ முழக்கம் இப்போது ‘ஜோக் இன் இந்தியாவாக’ மாறிவிட்டது. நீண்ட காலமாக நாட்டிற்கு பெருமை சேர்த்த பல தொழில்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இலக்குகளை அடைந்ததா? என்ற கேள்விக்கு இல்லையென்று புள்ளிவிவரங்களுடன் ‘க்ரோக்’ விளக்கியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டிற்குள் ஜிடிபி-யில் உற்பத்தி துறையின் பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 15.9 சதவீதமாக மட்டுமே எட்ட முடிந்தது என்று கூறியுள்ளது. மேலும் கடந்த 2022ம் ஆண்டிற்குள் உற்பத்தி துறையில் 10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ‘மேக் இன் இந்தியா’ இலக்கு நிர்ணயித்த நிலையில், ஆறு ஆண்டுகளில் உற்பத்தி துறையில் 1.57 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்று ‘க்ரோக்’ வெளிப்படையாக கூறியுள்ளது. சிஎம்ஐஇ, பிஎல்எஃப்எஸ் தரவுகளின்படி, பாஜக ஆட்சியில் 5 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று விளக்கியுள்ளது. எஃப்டிஐ, ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ் விஷயங்களிலும் ‘மேக் இன் இந்தியா’ இலக்குகளை பாஜக அரசு அடையவில்லை என்று கூறிய க்ரோக், ஒரு வகையில் இது தோல்வியடைந்த திட்டம் என்று விவரித்துள்ளது.
2 கோடி வேலைவாய்ப்பு என்னாச்சு?
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி, குறைந்தபட்சம் தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. கடந்த 2014 முதல் 2024 மார்ச் 31ம் தேதி வரை 9,31,644 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக ‘க்ரோக்’ தெரிவித்துள்ளது. இதன் விளைவாக கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் வீதியில் விடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. டேட்டாஃபுல் அறிக்கையின்படியும் க்ரோக் கூறியுள்ள விவரங்களின்படியும், மூடப்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை சேவைத் துறையைச் சேர்ந்தவை. சேவைத் துறையில் 28%, உற்பத்தித் துறையில் 24%, வணிகத்தில் 11%, கட்டுமானத் துறையில் 10% நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மற்ற துறைகளில் மேலும் 27% வரை உள்ளன. மேலும், கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.16 லட்சம் கோடி நிதி உதவி வழங்க நிதி ஒதுக்கப்படும் என்று மோடி அறிவித்திருந்தாலும், அது செயல்படுத்தப்படவில்லை.
பொதுத்துறைக்கு மரண அடி
பொதுத்துறை நிறுவனங்களை (பிஎஸ்யு) விற்பனை செய்வதிலும், நிறுவனங்களில் உள்ள முதலீடுகளை திரும்பப் பெறுவதிலும் மோடி அரசு புதிய சாதனைகளை படைத்துள்ளது. கடந்த 2014 முதல் 2024ம் ஆண்டு வரை மொத்தம் 179 பிஎஸ்யுக்களை விற்பனை செய்ததன் மூலமோ அல்லது முதலீடுகளை திரும்பப் பெற்றதன் மூலமோ ஒன்றிய அரசு ரூ. 4.48 லட்சம் கோடி சம்பாதித்துள்ளதாக ‘க்ரோக்’ பதிலளித்துள்ளது. கடந்த 1991 முதல் இதுவரை நடந்த பிஎஸ்யு விற்பனைகளில் 72 சதவீதம் மோடி ஆட்சியில்தான் நடந்துள்ளது என்று க்ரோக் திட்டவட்டமாக கூறியுள்ளது. ஏர் இந்தியா, பிபிசிஎல், எஸ்சிஐ, எல்ஐசி, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற பிஎஸ்யுக்களை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதி பங்குகளைவோ பாஜக அரசு விற்பனைக்கு வைத்துள்ளது என்று விளக்கியுள்ளது. மேற்கண்ட புள்ளி விபரங்களின்படி பார்த்தால் கடந்த 11 ஆண்டு பாஜக ஆட்சியில் 9,31,644 நிறுவனங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது; 5 கோடி வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் 72% விற்கப்பட்டுள்ளன என்று ஏஐ சாட்போட் க்ரோக் கொடுத்துள்ள தகவல்களில் அம்பலமாகி உள்ளது.
The post பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் 9,31,644 நிறுவனங்களுக்கு பூட்டு; 5 கோடி பேர் வேலையிழப்பு: ஏஐ தொழில்நுட்பத்தில் சாட்போட், க்ரோக் அளித்த பதிலில் அம்பலம் appeared first on Dinakaran.