ராமேஸ்வரம்: பிரதமர் மோடி ஏப்.6ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, பாம்பன் புதிய ரயில் பாலம், ராமேஸ்வரம் – தாம்பரம் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.535 கோடியில் புதிதாக மின்சார ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தனி ஆய்வு ரயிலில் நேற்று காலையில் ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்தார். அவருக்கு எஸ்ஆர்எம்யூ சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கூடுதல் விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் அளித்த பேட்டியில், ‘‘பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். ராமேஸ்வரம் – சென்னை தாம்பரம் ரயிலையும் பிரதமர் கொடியசைத்து துவங்கி வைக்கிறார். திறப்பு விழா நிகழ்வை காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பழைய ரயில் பாலத்தை பாகங்களாக பிரித்து மீண்டும் இணைப்பது தொழில்நுட்ப ரீதியாக கடினம். பாலத்தின் தன்மையும் மோசமான நிலையில் உள்ளது. ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் சேவை பணிகளை துவங்குவதற்கு சிறு பிரச்னைகள் உள்ளதால் தாமதம் ஆகும்’’ என்றார். ஆய்வில் ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வர ராவ், ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா, மூத்த கோட்ட செயல்பாட்டு மேலாளர் பிரசன்னா, மூத்த கோட்ட வணிக மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி மோடி வரும் ஏப்ரல் 5ம் தேதி ஒரு நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.
அங்கிருந்து மறுநாள் (ஏப். 6) பகல் 12.15 மணியளவில் கிளம்பி, மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு ஹெலிகாப்டரில் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடைபெறும் சாலைப்பாலத்தின் மையப்பகுதிக்கு வந்தடைகிறார். பகல் 12.45 மணிக்கு கொடியசைத்து புதிய ரயில் பாலத்தில் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். அதன் பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி – அம்பாளை தரிசனம் செய்கிறார். அடுத்து, பேருந்து நிலையம் அருகே அரசு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். சுமார் மூன்று மணிநேர நிகழ்ச்சியை முடித்து கொண்டு மாலை 3.30 மணிக்கு மேல் புறப்பட்டு மதுரை வந்து, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
The post பிரதமர் மோடி ஏப்.6ல் தமிழகம் வருகை: பாம்பன் புதிய ரயில் பாலம், ராமேஸ்வரம் – தாம்பரம் ரயில் சேவை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.