புதுச்சேரி: பிரபல சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2.45 கோடி பணம் சிக்கியது. புதுச்சேரி காமராஜர் சாலை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கட்டிடத்தின் 2வது மாடியில் ‘கோ பிரீ சைக்கிள்’ என்ற பெயரில் பிரபல தனியார் நிறுவனம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி செய்வதாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் எஸ்.பி. ரக்சனா சிங் (பொறுப்பு) தலைமையில் போலீசார் அந்த நிறுவனத்தில் கடந்த 3ம் தேதி நள்ளிரவு சோதனை நடத்தினர். அறையில் இருந்த ஒரு அலமாரியில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வருவாய்த்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் வந்து பணத்தை எண்ணியபோது ரூ.2 கோடியே 45 லட்சம் இருந்தது. பணத்தை அங்கேயே வைத்து பூட்டி சில் வைத்தனர். அந்நிறுவனத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.
தகவலையடுத்து அமலாக்கத்துறை துணை இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் அந்த நிறுவனத்துக்கு வந்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள், புதுச்சேரி வருவாய் துறை, காவல்துறை ஆகியோர் சென்று சோதனை நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக பணம் இருந்ததால் வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, 4 இயந்திரம் மூலம் பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பிரபல சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை: ரூ.2.45 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.