ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ரூ.5.9 கோடி பெற்றதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவன வழக்கில் ஏப்.27ல் விசாரணைக்கு ஆஜராக மகேஷ் பாபுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாய் சூர்யா மற்றும் சுரானா என இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய புராஜக்டுகளை ஆமோதித்து எண்டார்ஸ்மெண்ட் செய்திருந்தார் நடிகர் மகேஷ் பாபு. இதற்காக சுமார் 5.9 கோடி ரூபாயை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ரூ.3.4 கோடி காசோலையாகவும், ரூ.2.5 கோடி ரொக்கமாகவும் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த பணத்தை மோசடி மூலம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகித்ததன் அடிப்படையில் மகேஷ் பாபுவுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரே மனையை பலருக்கு விற்பனை செய்தது, போலியான பதிவு உத்தரவாதத்தை அளித்தது, ஒழுங்குமுறை சாராத மனை பிரிவுகளுக்கு மனை வாங்க முன்வந்தவர்களிடம் இருந்து முன்பணம் பெற்றது என இந்த நிறுவனங்கள் கோடி கணக்கிலான ரூபாயை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஏப்.27ல் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக மகேஷ் பாபுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு! appeared first on Dinakaran.