உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார். உத்தரப்பிரதேசத்தில் கடந்த 13ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரை கும்பமேளா நடைபெறுகின்றது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படும் கடந்த 13ம் தேதி பவுஷ் பூர்ணிமா மற்றும் 14ம் தேதி மகர சங்கராந்தி ஆகிய தேதிகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு குவிந்தனர்.
இதனை தொடர்ந்து அடுத்த முக்கிய நாளான மவுனி அமாவாசை (தை அமாவாசை) வருகிற 29ம் தேதி வருகின்றது. இந்த நாளில் புனித நீராடுவதற்காக வழக்கத்தை காட்டிலும் கூடுதல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு வருவார்கள். இதன்படி இந்த ஆண்டு மவுனி அமாவாசையன்று சுமார் 10 கோடி பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புனித நீராடினாா் பின் நெற்றியில் துறவிகள் திலகம் இட்டனர். கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பின்னர் அவர் படே அனுமான் கோவில் மற்றும் அபய்வத்தை பார்வையிட்டார். அமித் ஷாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
The post பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் புனித நீராடினார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத்..!! appeared first on Dinakaran.