பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். வருகிற அக்டோர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பீகாரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் நேற்று காலை அறிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் தனது எக்ஸ் தள பதிவில்,
‘பீகார் மக்களுக்கு ஏற்கனவே குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும். ஜூலை மாத கட்டணத்தில் 125 யூனிட் வரை பயன்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால், மொத்தம் 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post பீகார் சட்டமன்ற தேர்தல் எதிரொலி; ஆக.1ம் தேதி முதல் 125 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு appeared first on Dinakaran.