*கோடையை சமாளிக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
திருமயம் : திருமயம், அரிமளம் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் பருவமழை காலம் தவறியும், நீண்ட காலத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் பெய்துவிடுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயராமல், கடலில் கலக்கிறது. மேலும், சில இடங்களில் கடும் வறட்சியும், குறைவான மழை என மாறுபட்ட வானிலையால் மக்கள் அவதியடைகின்றனர்.
இந்நிலையில், நடப்பு ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கன மழை அளவு பதிவாகவில்லை. நடப்பாண்டில் பெய்த வடகிழக்குப் பருவமழை மாநிலத்தில் பல இடங்களில் வெள்ள சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியான அரிமளம், திருமயம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
மேலும், கிணறு பாசனம் மூலம் விவசாயம் செய்த விவசாயிகள் கிணற்றில் நீரூற்று இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, அரிமளம், திருமயம் பகுதிகளில் பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு வருகின்றன.
பொதுவாக தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வடகிழக்கு பருவமழை மூலமே அதிக அளவு மழை பெறும். இந்த மாதங்களில் பெய்யும் மழை நீரானது தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் தேங்கி அடுத்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் தமிழ்நாடு முழுவதும் வசந்த காலமாக காட்சியளிக்கும்.
அதேசமயம் கிராமங்கள் தோறும் நீர்நிலைகள் நிரம்பி பசுமையாக காட்சியளிப்பதால் இந்த மாதங்கள் தமிழகத்தில் உள்ள கிராமங்கள் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் பச்சை போர்வை போர்த்தியது போல் புற்களும், செடி கொடி, மரங்கள் மலர்களும் மலந்து இருப்பதை காண முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்வதோடு ஒரு சில ஆண்டுகளில் ஜனவரி மாதங்களிலும் வடகிழக்கு பருவ மழை பெய்கிறது. இது போன்ற பருவநிலை மாற்றம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வசந்த காலத்தில் கூட வறண்டு காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் நீரின்றி வறண்டு காணப்படுவதோடு பெரும்பாலான நீர் நிலைகளில் 10 சதவீத நீர் கூட இல்லாதது கிராம மக்களை வேதனை அடைய செய்துள்ளது.
இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள கண்மாய்கள், நீர்நிலைகள் நீரின்றி வறண்டு கோடை காலத்தை பொதுமக்கள் சமாளிப்பது சவாலாக உள்ளது. இதனால் அப்பகுதியில் எதிர்வரும் கோடைகாலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
The post புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதிகளில் கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு appeared first on Dinakaran.