புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் புதுச்சேரி கவர்னர் மாளிகை அமைந்துள்ளது. கவர்னர் கைலாசநாதன் நேற்று காலை முதல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மதியம் திரும்பினார். இதனிடையே கவர்னர் மாளிகைக்கு மர்ம நபர் ஒருவர் அனுப்பிய இ-மெயிலில் பயங்கரமான வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது வெடிக்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து எஸ்.பி. ரகுநாயகம் மற்றும் போலீசார் கவர்னர் மாளிகைக்கு விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் வரழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த திடீர் சோதனையால் கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள சாலைகள், இணைப்பு சாலைகள் அனைத்தும் பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது
நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை செல்போனில் பேசிய நபர், நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். மருத்துவமனை தரைமட்டமாக்கி விடும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், மருத்துவமனை போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், பல்நோக்கு மருத்துவமனையில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் வந்த செல்போன் எண் சிக்னலை ஆய்வு செய்ததில் திசையன்விளை அருகே உவரியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உவரியை அடுத்த குஞ்சன்விளையை சேர்ந்த முத்துபெருமாள்(42) என்பவரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். அவர் நேற்று முன்தினம் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு உடல்நலமின்றி சிகிச்சைக்கு சென்றபோது உடன் உதவியாளர் இல்லாததால் திருப்பி அனுப்பியதால் ஆத்திரமடைந்து, போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.
The post புதுவை கவர்னர் மாளிகைக்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.