புதுடெல்லி: புழுதிப் புயல், மின்னல், ஆலங்கட்டி மழையால் பீகாரில் 24 மணி நேரத்தில் 61 பேர் பலியான நிலையில், டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் வீசிய பலத்த காற்றினால் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, கடுமையான வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது. அதேசமயம், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் புழுதிப் புயல், மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையால் 61 பேர் உயிரிழந்தனர்.
ஆலங்கட்டி மழை மற்றும் மழை தொடர்பான சம்பவங்களில் 39 பேர் உயிரிழந்தனர்; மின்னல் தாக்கியதில் 22 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக நாளந்தா மாவட்டத்தில் 23 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. நேற்று மாலை டெல்லியில் புழுதிப் புயல் மற்றும் பலத்த காற்று வீசியது. அதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி-என்சிஆர் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, நேற்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டன. மேலும் 205 விமானங்களின் வருகை தாமதமானது.
டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட பதிவில், ‘டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சில விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்களது விமானங்கள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஏற்பட்ட பலத்த காற்றால் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்று மற்றும் லேசான மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்தின் நந்தபிரயாக் பகுதியில் கனமழை பெய்தது; இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடைகள் மற்றும் ஓட்டல்கள் பாதிக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்தில் மிதமான மழையுடன் பனிப்பொழிவு ஏற்பட்டது. இன்று இடியுடன் கூடிய புயல் மற்றும் மின்னலுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post புழுதிப் புயல், மின்னல், ஆலங்கட்டி மழையால் பீகாரில் 24 மணி நேரத்தில் 61 பேர் பலி: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை appeared first on Dinakaran.