பெங்களூரு: 18வது ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த வெற்றி விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபி நிர்வாகமே காரணம் என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “11 பேர் உயிரிழப்புக்கு காரணமான கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம் தான் காரணம். காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர்.சி.பி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.
வெற்றி கொண்டாட்டம் நடத்துவதாக காவல்துறைக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. 2009 நகர உத்தரவின் கீழ் கட்டாயமான முறையான அனுமதியைப் பெறவில்லை.ஜூன் நான்காம் தேதி காலை 8:55 மணிக்கு வெற்றியை பெங்களூரு மக்களுடன் கொண்டாட விரும்புவதாக விராட் கோலி பதிவிட்டு இருந்தார். இதன் எதிரொலியாக வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு மூன்று லட்சம் பேர் குவிந்தனர். மேலும் அன்றைய தினம் மாலை 3:14 மணிக்கு போடப்பட்ட பதிவில் மட்டுமே இலவச அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முன்பு போடப்பட்ட எந்த பதிவிலும் இது குறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால் கூட்ட நெரிசலுக்கு முழுக்க முழுக்க ஆர்.சி.பி. நிர்வாகமே காரணம்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் : கர்நாடக அரசு அறிக்கை appeared first on Dinakaran.