பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி ஓம் பிரகாஷை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி ஓம்பிரகாஷ் குடும்பத்துடன் பெங்களூரு எச்எஸ்ஆர் லே அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 1981 பேட்ஜ் அதிகாரியான ஓம் பிரகாஷ் கடந்த 2015ல் மாநிலத்தில் 38வது போலீஸ் டிஜிபியாக பதவி வகித்தார்.
68 வயதான நிலையில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எச்எஸ்ஆர் லே அவுட்டில் வசித்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரின் மனைவி பல்லவி தன்னுடைய கணவர் (ஓம் பிரகாஷ்) தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்வதாக சில வாட்ஸ்அப் குரூப்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவரின் வீட்டில் ஓம்பிரகாஷ் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்த போலீசார் வீட்டிற்கு சென்ற போது அவரின் மனைவி முதலில் கதவை திறக்க வில்லை.
போலீசாரின் தொடர் முயற்சியால் கதவு திறக்கப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை நடத்துவதற்காக செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் அவரின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ஒய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ஓம் பிரகாஷ் மற்றும் அவரின் மனைவி இடையே நீண்ட காலமாக தகராறு இருந்துள்ளது.
20 வருடம் முன்பே கணவர் மற்றும் மனைவி இடையே மனக்கசப்பு இருந்துள்ளது. எச்எஸ்ஆர் லே அவுட் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக இரண்டு தரப்பினரும் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஓம்பிரகாஷின் மனைவி பல்லவியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் போலீஸ்டிஜிபி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017ல் ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ், பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில் உள்ள பிப்ராசி கிராமத்தைச் சேர்ந்தவர். புவியியலில் எம்எஸ்சி பட்டதாரியான இவர், ஜனாதிபதியின் காவல்துறை பதக்கம் பெற்றவர். தீவிரவாதம் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஓம் பிரகாஷ் நிறைய நடவடிக்கைகளை செய்துள்ளார். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் பலரை வெற்றிகரமாக கைது செய்த போதிலும், இவரை அவரது மனைவி யே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* போலீசாருக்கு தகவல் அளித்த மனைவி
ஓம் பிரகாஷின் சடலம் அவரின் வீட்டு முதல் அறையில் வைக்கப்பட்டிருந்தது. அவர் வசித்த வீடு மூன்று மாடிகள் உடையதாகும். மகன் -மருமகள் என குடும்பத்தினர் அதில் வசித்துள்ளனர். கொலை நடந்த போது வீட்டில் யார் யார் இருந்தனர்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓம் பிரகாஷ் கொலை செய்யப்பட்ட தகவலை அவரின் மனைவி பல்லவி போலீசாருக்கு தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்த போலீசார் எச்எஸ்ஆர் லே அவுட்டிலுள்ள அவரின் வீட்டிற்கு சென்ற போது ஓம்பிரகாஷ் சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. முகம் மறைக்கப்பட்டிருந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலம் இருந்துள்ளது.
The post பெங்களூருவில் பயங்கரம் முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது appeared first on Dinakaran.