சென்னை: “காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தமது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தம்மை படுகொலை செய்ய சதி நடந்ததாக தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியவருமான கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.