கொல்கத்தா: சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும்.
டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சியல்டா கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்க மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய்க்கு சியல்டா கோர்ட்டு வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என்று கூறி மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதிகள் டெபாங்ஷூ பசாக் மற்றும் எம்டி ஷப்பர் ரஷிதி அடங்கிய அமர்வு முன்பு இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதற்கு பதில் அளித்த நீதிமன்ற அமர்வு, “இதே கோரிக்கையுடன் மாநில அரசும் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது, அதனுடன் சேர்த்து சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவும் வரும் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தது.
The post பெண் டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு appeared first on Dinakaran.