திருவனந்தபுரம்: கொச்சியில் போதைப்பொருள் சோதனையின்போது ஓட்டலில் இருந்து தப்பி ஓடிய பிரபல மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோவை நேற்று கொச்சி போலீசார் கைது செய்தனர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷைன் டோம் சாக்கோ. மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இவர், தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்களிலும், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன் கொக்கைன் போதைப்பொருளுடன் இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதான் கேரளாவில் முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட கொக்கைன் வழக்காகும். இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஷைன் டோம் சாக்கோவை சமீபத்தில் எர்ணாகுளம் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆலப்புழாவில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட தஸ்லிமா சுல்தான் என்ற இளம்பெண்ணுடன் ஷைன் டோம் சாக்கோவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பில் நடிகர் ஷைன் டோம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியதை தான் பார்த்ததாகவும், போதையில் தன்னிடமும் இன்னொரு நடிகையிடமும் அவர் அத்துமீறியதாகவும் முன்னணி மலையாள நடிகையான வின்சி அலோஷியஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சியிலுள்ள ஓட்டலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரான சஜீர் என்பவர் தங்கியிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு சென்ற போலீசார் ஒரு அறையை தட்டினர்.
அப்போது அந்த அறையில் இருந்த நடிகர் ஷைன் டோம் சாக்கோ அறையின் பின்புற ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடினார். இவர் தப்பி ஓடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் போதைப்பொருள் இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து ஷைன் டோம் சாக்கோவிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர். ஆனால் அவர் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர். இதன்படி நேற்று காலை 10 மணிக்கு அவர் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் முதலில் தனக்கும், போதைப்பொருள் கும்பல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார்.
ஆனால் போதைப்பொருள் கும்பல்களுக்கு அவர் கூகுள் பே மூலம் பணம் அனுப்பியது உள்பட பல ஆதாரங்களை போலீஸ் காண்பித்ததை தொடர்ந்து வேறு வழியின்றி அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு தஸ்லிமா சுல்தான், சஜீர் உள்பட பல போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகவும், மெத்தபிட்டமின், கஞ்சா ஆகிய போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும் அவர் போலீசிடம் கூறினார். போலீசார் ஷைன் டோம் சாக்கோவை கைது செய்தனர். போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளாரா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அவரது தலைமுடி மற்றும் நகம் ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் நேற்று மாலை அவரை போலீசார் விடுவித்தனர்.
The post போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்பு: பிரபல மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ கைது appeared first on Dinakaran.