புதுடெல்லி: போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கருத்து கூறி வரும் நிலையில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என்று காங்கிரஸ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் பதற்றம் நிலவியது. இந்நிலையில், 4 நாள்களுக்கு பிறகு இந்த தாக்குதல் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தி கொள்வதாக தெரிவித்தன. இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை முன்வைத்து மோதலை நிறுத்தியதாக டிரம்ப் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து எதிர்க்கட்சிகளிடையே விமர்சனம் எழுந்த நிலையில், மோதல் குறித்து மட்டுமே அமெரிக்கா ஆலோசித்ததாகவும் வர்த்தகம் தொடர்பாக பேசவில்லை என்றும் இந்திய வெளியுறவு துறை விளக்கம் அளித்தது. அதேபோல், இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே தாக்குதலை நிறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், வர்த்தகத்தை முன்னிறுத்திதான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார். வெள்ளை மாளிகையில் தென்னாப்பிரிக்க அதிபருடனான சந்திப்பின்போதும், ‘வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாகவும், பாகிஸ்தானில் சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள், மோடியும் சிறந்த மனிதர்” என டிரம்ப் பேசினார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், அவரது நண்பரான பிரதமர் மோடியும் வெளியுறவுத் துறை அமைச்சரும் அமைதியாக இருக்கின்றனர். பிரதமர் மோடியை பாராட்டும் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபையும் பாராட்டுகிறார். இதன்பொருள் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மட்டத்தில் இருக்கிறது என்பதுதான். இதனை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஆபரேஷன் சிந்தூரை 4 நாள்களில் தலையிட்டு முடித்ததாக டிரம்ப் கூறுவதை கேட்டு நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பிரதமர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை திசைதிருப்ப கூடாது’ என்றார்.
The post போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து; பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்?.. காங்கிரஸ் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.