திருமலை: கொள்ளை வழக்கில் டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்த ஆசாமியை கைது செய்ய முயன்றபோது ேபாலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்ப முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 துப்பாக்கி, 23 தோட்டக்காளை பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரபாகர் (30). இவர் மீது ஆந்திரா மற்றும் தெலங்கானா போலீஸ் நிலையங்களில் நூதன மோசடி, திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பான 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கடந்த 2022ம் ஆண்டு போலீசார் கைது செய்து அனகப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாகப்பட்டினம் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச்சென்றனர். அப்போது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பிரபாகர் தப்பி ஓடிவிட்டார். அவரை கடந்த 3 ஆண்டுகளாக போலீசார் தேடிவந்தனர். போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிய அவர் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
கொள்ளையடிக்கும் பணத்தை அவர் பப்பில் சென்று உயர் ரக மதுபான வகைகளை குடித்தும், சொகுசு கார்களில் வலம் வந்தும் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு வந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இருப்பினும் தன்னை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அடிக்கடி தனது `கெட்டப்’ மாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் ஐதராபாத் பிரிசம் பகுதியில் உள்ள பப்பில் மது போதையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 5 போலீசார் அந்த பப் வெளியே மப்டியில் காத்திருந்தனர். அப்போது குடிபோதையில் வெளியே வந்த பிரபாகரை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். இதையறிந்த பிரபாகர், யாரும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வெங்கடராம் என்ற போலீஸ்காரரை சுட்டார்.
இதில் அந்த போலீஸ்காரரின் தொடைக்குள் குண்டு பாய்ந்தது. இதையடுத்து மற்ற போலீசார், பிரபாகரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் 2 துப்பாக்கிகள் மற்றும் 23 தோட்டக்கள் இருந்தது ெதரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் பார்த்து அங்கிருந்த மக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். உடனடியாக அந்த பப் மூடப்பட்டது.இதையடுத்து துப்பாக்கி குண்டு பாய்ந்த வெங்கடராம் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபாகரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சைபராபாத் காவல்துறை ஆணையர் அவினாஷ் மொஹந்தி கூறுகையில், `பல ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தப்பி வந்த பிரபாகரை பொறி வைத்து பிடித்துள்ளோம். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பிரபாகர் இதுவரை பல கோடி ரூபாய் மோசடி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார். அவரிடம் முழு விசாரணையை முடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம்’ என்றார்.
The post போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பமுயன்றவர் கைது: 2 துப்பாக்கி, 23 தோட்டாக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.