ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் மணிஷ். இவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கோட்டா பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, ‘இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 12ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறிக்கப்பட்டிருந்தது. மணிஷுக்கு துணையாக அவரது தந்தை ஜெகதீஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.
சம்பவத்தன்று மணிஷ், ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜெகதீஸ், ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்தார். அப்போது அங்கு வந்த மருத்துவர்கள் சிலர், ஜெகதீஸ் என்பவரை சிகிச்சைக்காக அழைத்தனர். உடனே அவர், கையை உயர்த்தினார். இதையடுத்து அந்த மருத்துவர்கள், ஜெகதீஸை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்று அவரது கையில் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர். இதையறிந்த அவரது மகன் மணிஷ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அங்கு சென்று மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனையடுத்து அவரது தந்தைக்கு கையில் 6 தையல் போடப்பட்டு திருப்பி அனுப்பி உள்ளனர். நோயாளி என நினைத்து மற்றொரு நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மகனுக்கு பதிலாக தந்தைக்கு ஆபரேஷன்: ராஜஸ்தானில்தான் இந்த அவலம் appeared first on Dinakaran.