புதுடெல்லி: மகள் இருக்கும் இடம் தெரிந்தும் நீதிமன்றத்தில் உண்மையை மறைத்து ஆட்ெகாணர்வு மனு தாக்கல் செய்த பெண்ணுக்கு உயர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. டெல்லியை சேர்ந்த பெண் தனது மகள் அவரது கணவரின் குடும்பத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அக்டோபரில் மகளைப் பார்க்க சென்ற போது, தன்னைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
போலீசில் அவர் அளித்த புகார் அடிப்படையில் விசாரணை நடந்த போது அவரது மகள் மும்பையில் வேறு ஒரு நபருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இதை மறைத்து அவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது உயர் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. மேலும் கணவருக்கும், அவரது மகளுக்கும் பிறந்த குழந்தை, தந்தைவழி பாட்டியால் பராமரிக்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மகளின் இருப்பிடம் தெரிந்திருந்தும், நீதிமன்றத்தின் முன் முழுமையான உண்மைகளை வெளியிடாமல், அவளைப் பார்க்கக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதீபா எம் சிங், அமித் ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
மேலும் நீதிபதிகள் கூறும்போது,’ ஆட்கொணர்வு மனு என்பது ஒரு நபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள நிகழ்வுகளில் உண்மையாகவே குடிமக்களுக்கு உதவும் வகையில் உள்ளது. ஆனால் இதுபோன்ற மனுக்களால் ஆட்கொணர்வு மனு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் தங்கள் திருமண தகராறு தொடர்பான உண்மைகளை ஆட்கொணர்வு மனு மூலம் வெளியே கொண்டு வர முயற்சிக்கின்றனர்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
The post மகள் இருக்கும் இடம் தெரிந்தும் நீதிமன்றத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.